பொங்கல் பண்டிகைக்காக வழங்க உள்ள வேட்டி, சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ. 13.66 கோடி செலவாகும்.
பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடைகள் மூலமாக 1.77 கோடி வேட்டி மற்றும் சேலைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. வழக்கமாக வழங்கப்படும் நீலம், வெள்ளை, இளஞ்சிவப்பு, தங்க நிறங்களுடன், இந்த ஆண்டு பிரகாசமான பச்சை உள்ளிட்ட 15 வண்ணங்களில் சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. 5 மீட்டர் நீளம், 45 அங்குல அகலத்தில் தயாரிக்கப்படும் சேலைகளில் 60 கவுண்ட் பாலிகாட்டன் நூல் பயன்படுத்தப்படுகிறது. மேலும், வெள்ளி, தங்க நிற ஜரிகை பார்டர்கள் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், வேட்டியின் நீளம் 3.75 மீட்டரில் இருந்து 2.5 மீட்டராக குறைக்கப்பட்டு, அகலம் 50 அங்குலத்தில் இருந்து 52 அங்குலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 65:35 என்ற விகிதத்தில் பாலியஸ்டர்–காட்டன் நூல் பயன்படுத்தப்பட்டு, வேட்டிகள் சலவை செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன. இதற்காக முதற்கட்டமாக ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, தங்கள் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என நெசவாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு, கூலி உயர்வு தொடர்பாக, இக்குழுவினர் அரசுக்கு அறிக்கை அளித்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பெடல் தறியில் நெய்யப்படும் சேலைக்கு ரூ. 125.72-ம், வேட்டிக்கு ரூ. 49.99-ம் கூலியாக வழங்கப்படும். விசைத்தறியில் நெய்யப்படும் சேலைக்கு ரூ. 54.81-ம், வேட்டிக்கு ரூ. 23.34-ம் கூலியாக வழங்கப்படவுள்ளது. இந்த கூலி உயர்வு மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ. 13.66 கோடி செலவாகும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.